உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கலெக்டர் உத்தரவு:  மீண்டும் அதே புகார்  வராதபடி அதிகாரிகள் தீர்வு காணுங்கள்

 கலெக்டர் உத்தரவு:  மீண்டும் அதே புகார்  வராதபடி அதிகாரிகள் தீர்வு காணுங்கள்

ராமநாதபுரம்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஒரே கோரிக்கைக்கு பல முறை மனு அளிக்காத வகையில் விரைந்து தீர்வு காண வேண்டும் என புதிய கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதே போன்று மனு எழுத ரூ.100 வரை வசூல் வேட்டையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர்கள் சங்கரநாராயணன், நில எடுப்பு பிரிவு சேக் மைதீன் முன்னிலை வகித்தனர். * கள்ளத்தனமாக மதுவிற்பனை: கடலாடி அருகே கீழமுந்தல் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் காரில் வரும் போது நிறுத்தி அவரிடம் மனு அளித்தனர். ஊரில் மதுக்கடை இல்லை. ஆனால் கள்ளத்தனமாக போலீசார் ஆதரவுடன் மது விற்கின்றனர். எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் கூறினர். மது விற்பனை தடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். * மாற்றுதிறனாளிகள் அவதி: தொண்டி அருக நம்புதாளை கிராமத்தை சேர்ந்த கால்களை இழந்த மாற்றுத்திறனாளி கருப்பையா 40, தவழ்ந்த படி வரும் போது காரில் வந்த கலெக்டர் இறங்கி வந்து மனு வாங்கி விசாரித்தார். 80 சதவீதம் ஊனத்துடன் சிரமப்படுகிறேன். அரசின் டூவீலர் வழங்க வேண்டும் என்றார். கலெக்டர் உதவி செய்வதாக கூறினார். * தினமலர் செய்தியை சுட்டிக் காட்டி புகார்: சோழந்துாரை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி தினமலர் நாளிதழில் வெளியான செய்திகளுடன் ராமநாதபுரத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேண்டும். முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன் 108 வசதி வேண்டும். காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாதாகையுடன் வலியுறுத்தினார். * ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: சாயல்குடி மக்கள் நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் (த.வெ.க.,) பாஸ்கரன் தலைமையில் மக்கள் மனு அளித்தனர். சாயல்குடி பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். * மதுகடையை மூட கோரிக்கை: ராமநாதம்தொகுதி தமிழ்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மனு அளித்தனர். இதில் அரண்மனை அருகே செயல்படும் மனமகிழ் மன்ற மதுபார், புது பஸ் ஸ்டாண்ட், வழிவிடு முருகன் கோயில் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தினர். * வாலிபர் மீது பொய் வழக்கு : கடலாடி தாலுகா சிறுகுடி கிராம மக்கள் அளித்த மனுவில் அப்பகுதியை சேர்ந்த திருமுருகன் மீது கடலாடி போலீசார் பொய் கஞ்சா வழக்கு பதிந்துள்ளனர். அதை ரத்து செய்து, கடலாடி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதே போல பட்டா மாறுதல், உதவித்தொகை, வேலை வாய்ப்பு, என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 401 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: அதிகாரிகள், அலுவலர்கள் சரியாக செயல்பட்டால் இவ்வளவு மனுக்கள் ஏன் வருகிறது. வாரந்தோறும் அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் கண்டிப்பாக வரவேண்டும். கடந்த வார மனு மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் தர வேண்டும். இனி வரும் வாரங்களில் குறைதீர் கூட்டத்தில் மீண்டும், மீண்டும் வரும் மனுக்களை குறைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, கூடுதல் எஸ்.பி., பாலச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். * வசூல் வேட்டை: கலெக்டர் அலுவலக வளாகத்தில் இலவசமாக மனு எழுதிதர ஆட்கள் நியமித்தும், அதை மீறி தனியார் சிலரிடம் ஒரு மனு எழுதி தர ரூ.50 முதல் ரூ.100 கொடுத்து மக்கள் ஏமாறுகின்றனர். இதை தடுக்க வேண்டும். இலவச மனு எழுதும் விபரம் குறித்து பிளக்ஸ் பேனர் வைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ