ராமநாதபுரம் : திருடு போன மோட்டாரை கண்டுபிடித்த பிறகும் போலீசார் தர மறுப்பதால் இரண்டரை ஏக்கரில் நெற்பயிர் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக காய்ந்த நெற்பயிருடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண் புகார் அளித்தார்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமிற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடிகளில் பணியின் போது மரணமடைந்தவர்களின் பெண் வாரிசுதாரர் 5 பேருக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டிய 30 டிரைவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள், விழிப்புணர்வு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள், மடக்கு சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார். மோட்டாரை தராமல் அலைக்கழிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணியை சேர்ந்த சகாய மாதா நிலத்து பத்திரம், காய்ந்த நெற்பயிருடன் மனு அளித்தார். அதில், திருடு போன மோட்டாரை கண்டுபிடித்த பிறகும் மேல்நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மோட்டாரை தர மறுப்பதாக புகார் தெரிவித்தார்.இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இரண்டரை ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் எனது நிலத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கே எழுதி வைக்க முடிவு செய்துள்ளேன் என்றார். சில்லரை மது விற்பதாக புகார்
ராமநாதபுரம் மாவட்ட தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் மனு அளித்தனர். அதில் கடலோர கிராமங்களில் சில கடைகள், வீடுகளில் அதிகாலை, இரவு நேரத்தில் சில்லரை மது விற்பனை நடக்கிறது. இதனை போலீசார் தடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.இதே போல் வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக 384 பேர் மனுக்களை அளித்ததனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி பங்கேற்றனர்.