காணாமல் போன மாணவரை ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் தேடும் சி.பி.சி.ஐ.டி., போலீசார்
ராமநாதபுரம்:எட்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மாணவரை ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் கம்ப்யூட்டரில் பழைய படத்தை தற்போதைய தோற்றத்தில் உருவாக்கி சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை சேர்ந்த நடராஜன் 55, மகன் விக்னேஷ்வரன் 17. இவர் 2017 ல் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்த போது மாயமானார். இவரது தந்தை நடராஜன் புகாரில் அபிராமம் போலீசார் தேடினர்.விக்னேஷ்வரன் குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடராஜன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மாணவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். தனிப்படை அமைத்து போலீசார் தேடிய நிலையில் விக்னேஷ்வரனை கண்டுபிடிக்க முடியவில்லை, என நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். நீதிபதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி 2019ல் உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விக்னேஷ்வரன் குறித்து விசாரணையை துவக்கினர். சமூக வலை தளங்களில் முகநுால் பக்கத்தில் தொடர்பில் உள்ளதாக தெரிய வந்தது.அவரது முகநுால் கணக்கு குறித்து முகநுால் நிறுவனத்திடம் விசாரித்து வருகின்றனர். 17 வயதில் காணாமல் போன விக்னேஷ்வரன் 25 வயதில் எப்படி இருப்பார் என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் கம்ப்யூட்டரில் படத்தை வடிவமைத்து தற்போதைய உருவ அமைப்பை வைத்து தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் டில்லியில் விக்னேஷ்வரனை பார்த்ததாக தெரிவித்ததால் தற்போது ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படத்தை தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய ஆறு மொழிகளில் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு டில்லி, ஆக்ரா, மதுரா உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் ஒட்டி விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.