உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயிர் காப்பீடு இழப்பீடு தொகை குறைவால் விவசாயிகள் அதிருப்தி; ஏக்கருக்கு ரூ.22,000 வழங்கிட வலியுறுத்தல்

பயிர் காப்பீடு இழப்பீடு தொகை குறைவால் விவசாயிகள் அதிருப்தி; ஏக்கருக்கு ரூ.22,000 வழங்கிட வலியுறுத்தல்

மாவட்டத்தில் 2024ல் செப்.,ல் 1.37 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடலாடி, கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக உள்ளது. சம்பா நெல் சாகுபடியில் மழை பெய்யாததால் விதைக்கப்பட்ட நெல் முளைப்புத்திறன் இல்லாத நிலையில் 2வது முறையாக விவசாயிகள் விதைத்தனர்.அதன் பின்பு பெய்த பருவமழை காரணமாக நெற்பயிர் விளைச்சல் கண்டு அறுவடைக்கு வரும் போது மீண்டும் பெய்த பருவம் தவறிய மழையால் பயிர்கள் முளைத்தன. ஏக்கருக்கு 40 மூடை நெல் கிடைக்கும் இடத்தில் 6 முதல் 8 மூடைகள் கிடைத்தன.ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தனர். கூட்டுறவு வங்கி கடனாக ஏக்கருக்கு 22 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.இந்நிலையில் தற்போது நெற்பயிருக்கு காப்பீடு செய்த நிறுவனங்கள் தரப்பில் கடலாடி, முதுகுளத்துார், கமுதி, பரமக்குடி ஆகிய பகுதிகளுக்கு எஸ்.பி.ஐ., காப்பீடு நிறுவனம் சார்பில் ரூ.30 கோடி இழப்பீடு தொகை ஒதுக்கீடு செய்துள்ளது.ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, நயினார் கோவில், மண்டபம் ஆகிய இடங்களுக்கு இப்கோ டோக்கியோ என்ற பயிர் காப்பீடு நிறுவனம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இழப்பீடு புள்ளியியல் துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்தும், செயற்கை கோள் மூலம் இழப்பீடு ஆய்வு செய்து வழங்கப்பட்டுள்ளது.இதில் ஒருவருக்கு ரூ.4000 முதல் 8000 வரை வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகை குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க நிறுவனர் தலைவர் பாக்கியநாதன் கூறியுள்ளதாவது: பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு மிகவும் குறைந்த பட்ச தொகையே வழங்கப்பட்டுள்ளது.கணக்கெடுப்பு செய்த புள்ளியியல், வேளாண்துறை, வருவாய்த்துறையினர் சரியாக செய்யாததால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.தற்போது வழங்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதல்ல, ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் வரை வழங்கிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
மே 21, 2025 09:42

பிரதான் மந்திரீக்கி, இல்லேன்னா விடியல்க்கீ காப்பீட்டு திட்டத்தில் சேரலியா? தனியார்கிட்டே போனா டவுசர் வரை உருவிடுட்டு பாக்கி இருந்தாத்தானே குடுப்பாங்க.


சமீபத்திய செய்தி