நத்தம் நில அளவை திருத்தம் பதிவேற்றம் செய்வதில் தாமதம்
ராமநாதபுரம்: நத்தம் கிராம கணக்குகளை நில அளவை இயக்குநர் உத்தரவுப்படி கரெக் ஷன் சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து திருத்தங்களை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.ஏ.ஓ.,க்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதில், மாவட்டத்தில் நத்தம் நில அளவை கிராம கணக்குகள் நில அளவை துறையினரால் கம்ப்யூட்டரில் பதிவேற்றப்பட்டன.முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பொது இணையதளத்திலும், அலுவலர் பயன்பாட்டிற்கு 'தமிழ் நிலம்' என்ற இணையதளத்திலும் 2024 மார்ச்சில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதை கண்டு அவற்றை சரி செய்யக்கோரி சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட மையம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.மேலும் தினமலர் நாளிதழில் இதுகுறித்த செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நத்தம் கம்ப்யூட்டர் மயமாக்களில் உள்ள பிழைகளை சரிசெய்ய கரெக் ஷன் சாப்ட்வேர் தயார் செய்யப்பட்டு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நில அளவைதுறை இயக்குநர் உத்தரவிட்டார்.நத்தம் சிட்டா, அடங்கல் கணக்குகளை ஆன்-லைனில் இருந்து பிரதி எடுத்து அப்பிரதியை கையடக்க நத்தம் கிராம கணக்குகளுடன் ஒப்பிட்டு பிழையாக உள்ள பதிவுகளை சிவப்பு மையினால் திருத்தம் செய்து அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி திருத்த பணியானது வி.ஏ.ஓ.,க்களால் முழுவதுமாக முடிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட நத்தம் கிராம கணக்குகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித திருத்த பணிகளையும் நத்தம் கரெக் ஷன் சாப்ட்வேரில் செய்யவில்லை. இதனால் பிழையான கிராம கணக்குகளை பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வேலைகளில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நத்தம் கிராம கணக்குகளை நில அளவை இயக்குநர் உத்தரவுப்படி கரெக் ஷன் சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து திருத்தங்களை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.