தேவிபட்டினம் கடலில் கலக்கும் கழிவுகள்: நடவடிக்கை அவசியம்
தேவிபட்டினம்: தேவிபட்டினம் கடலில் கலக்கும் குடியிருப்பு கழிவுகளை தடுப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. மேலும் ஏராளமான மீனவர்கள் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் கடலோரத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கடல் பகுதியில் கலக்கும் வகையில் கால்வாய் அமைத்து விடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏற்படும் கடல் மாசு காரணமாக கடலில் உள்ள அரிய வகை உயிரினங்களான கடல் பசு, கடல் குதிரைகள், கடல் அட்டைகள் உள்ளிட்டவைகள் அழியும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும், கடற்கரையோரம் கழிவின் காரணமாக துர்நாற்றம் ஏற்படுவதாலும், அப்பகுதியினர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, குடியிருப்பு கழிவுகள் கடலில் நேரடியாக கலப்பதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.