காவிரி குடிநீர் பணிகளை டிச.,ல் முடிப்பதற்கு..திட்டம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.2819.78 கோடி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.2819.78 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 2023 மே மாதத்தில் துவங்கப்பட்டு தொடர்ந்து பணி நடக்கிறது.இப்பணிகளை டிச.,இறுதிக்குள் முடிக்க உள்ளனர்.ஜல் ஜீவன் திட்டத்தில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.4187 கோடியில் திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கரூர் மாவட்டம் நஞ்சைபுகழுர் எனும் இடத்தில் காவிரி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து 50 கி.மீ.,ல் உள்ள அரவக்குறிச்சில் 135 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரேற்றம் செய்து திண்டுக்கல், ராமநாதபுரம் என இரு பிரிவுகளாக வழங்கப்பட உள்ளது. இதன்படி 10 லட்சம் கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. 3728 கி.மீ., நகர், ஊரக பகுதிகளில் குழாய் பதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள 1580 மேல்நிலை தொட்டிகளுடன் இத்திட்டத்தில் கூடுதலாக 825 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ரூ.2819 கோடியே 78 லட்சத்தில் மாவட்டத்தில் தற்போது நகர், புறநகர் பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் ரோடுகளில் குழாய் பதிக்க காலதாமதம் ஏற்படுகிறது. வரும் டிச.,ல் பணிகள் முடிவடைந்துவிடும். அதன் பிறகு ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகள், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, முதுகுளத்துார், மண்டபம், சாயல்குடி ஆகிய பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 2306 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.---