உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் நேர்முகதேர்வுக்கு வந்த  மாற்றுத்திறனாளிகள் அவதி

டூவீலர் நேர்முகதேர்வுக்கு வந்த  மாற்றுத்திறனாளிகள் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் டூவீலர் பெறுவதற்கான நேர்முகத்தேர்விற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா டூவீலர்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.நடப்பாண்டில் ராமநாதபுரத்தில் டூவீலர் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 500க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன.இவர்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 பேர் நேர்முகத்தேர்வில் பங்கேற்க வந்திருந்தனர்.இவர்களில் 10 பேர் வீதம் உள்ளே அழைக்கப்பட்டு ஆவணங்கள், மருத்துவத் தகுதிகளை அதிகாரிகள், டாக்டர்கள் ஆய்வு செய்தனர். இதனால் நீண்டநேரம் காத்திருந்து மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். அவர்கள் கூறியதாவது: கால்களை இழந்தவர்கள் வெளியூர்களில் இருந்து டாக்சி, ஆட்டோவில் வருவதற்கு நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. இம்மாதிரியான நேர்முகத்தேர்வை தாலுகா வாரியாக நடத்தினால் மிகவும் வசதியாக இருக்கும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் கூறுகையில், 2 நாட்கள் நேர்முகத் தேர்வு நடக்கிறது. தகுதியுள்ள மாற்றுத்தினாளிகள் அனைவருக்கும் டூவீலர் வழங்கப்படும். ஆட்கள் பற்றாக்குறையால் தாலுகா வாரியாக நடத்துவது சிரமம். மாற்றுத்திறனாளிகள் அமர இருக்கை, குடிநீர் வசதி செய்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !