வேளாண்மை, மதிப்பு கூட்டுதல் குறித்து மாவட்ட அளவில் கருத்தரங்கம்
சாயல்குடி: தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் மிளகாய் சாகுபடி அங்கக வேளாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் சாயல்குடியில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாஸ்கர மணியன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் வரவேற்றார்.வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கோபாலகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அங்கக வேளாண்மை முறைகள் பற்றியும், மிளகாய் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றி விவசாயிகள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். கடலாடி தோட்டக்கலை உதவி இயக்குனர் தாரணி நன்றி கூறினார்.மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.