பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் அரிய மீன் இனமான 5 அடி நீளமுள்ள டூம்ஸ்டே மீன் சிக்கியது. அக்., 5ல் பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று மதியம் கரை திரும்பினர். இதில் ஒரு மீனவரின் படகில் 5 அடி நீளம், 6 கிலோவில் அரிய வகை மீன் சிக்கியது. இந்த மீன் மீனவர்கள் வலையில் சிக்குவது இல்லை. ஆழ்கடலில் வசிக்கும் இந்த மீனை ஆராய்ச்சியாளர்கள், டூம்ஸ்டே மீன் மற்றும் ஓரா பிஸ் என அழைக்கின்றனர். ஆழ்கடலில் வாழும் இம்மீன் எப்போதாவது கடல் மேற்பரப்பில் வந்த சமயத்தில் பாம்பன் மீனவர் வலையில் சிக்கி உள்ளது எனவும், ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த மீன்கள் கரை ஒதுங்கினால் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படும் என கூறுவார்கள் என மீன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.