திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் கண்டுகொள்ளாத கல்வித் துறை அதிகாரிகள்
சிக்கல்: சிக்கல் அருகே ஆண்டிச்சிகுளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளதால் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆண்டிச்சி குளத்தில் கடந்த 1975 முதல் ஓட்டு கட்டடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்குகிறது. தலைமையாசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். பள்ளியின் அருகே உள்ள வளாகத்தில் போதிய இடம் இருந்ததால் புதிய கட்டடம் தேவை என பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த ஆண்டு ரூ. 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி கட்டடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஆண்டிச்சி குளத்தைச் சேர்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார் கூறியதாவது:புதிய பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் மின்விளக்குகள், மின் விசிறி பொருத்தப்படாமல் உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.தற்போது சேதமடைந்த ஓட்டு கட்டடத்தில் பள்ளி இயங்கி வருவதால் மாணவர்கள் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.மின் இணைப்பு வழங்கி பள்ளியை வரும் கல்வியாண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.