ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஏற்றிச்சென்ற மின்வாரிய வாகனம்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையம் மூலம் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில் ஏற்படும் மின் பழுது, புதிய மின்கம்பம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று மின்வாரிய வாகனம் மூலம் ஏற்றிச் செல்லப்பட்ட மின்கம்பத்தில் வெளிப்பகுதியில் எந்த எச்சரிக்கை துணிகளோ, ஒளிரும் விளக்குகளோ இன்றி கொண்டு செல்லப்பட்டதால் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் நீண்டு கொண்டிருந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்தித்தனர்.எனவே வாகனங்களில் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பொருள்களை ஏற்றிச் செல்லும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் சிவப்பு துணிகள், மற்றும் ஒளிரும் விளக்குகளை பயன்படுத்திக் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.