பள்ளி மாணவியர் விடுதி அருகே சீமைக் கருவேலம் ஆக்கிரமிப்பு
சாயல்குடி: சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மைதானம் அருகே அரசு பள்ளி மாணவியர் விடுதிக்கு செல்லும் சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் பொதுமக்களும் மாணவிகளும் சிரமத்தை சந்திக்கின்றனர். சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து விடுதி செல்லும் தார் ரோட்டின் இரு புறங்களிலும் பல மாதங்களாக அகற்றப்படாத சாலையோர சீமை கருவேல மரங்களால் விஷ ஜந்துக்கள் வருகின்றன. இதனால் மாணவிகள் அச்சத்துடன் விடுதிக்கு செல்லும் நிலை உள்ளது. இப்பகுதியை மாலை முதல் இரவு வரை குடிமகன்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் அப்பகுதியை கடக்கின்றனர். எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அப்பகுதியில் மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தி வெளிச்சம் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.