உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரிய கண்மாயில் தண்ணீர் வற்றி வருவதால் விவசாயிகள் பாதிப்பு

பெரிய கண்மாயில் தண்ணீர் வற்றி வருவதால் விவசாயிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் வறட்சியால் தண்ணீர் வேகமாக வற்றி வருவதால் கோடையில் நெல், பருத்தி, எள், உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இரண்டாவது பெரிய கண்மாய், நாரை பறக்க முடியாத 48 குருச்சிகளைக் (கிராமங்களை) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இந்த கண்மாயில் மழைக்காலத்தில் தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயில் கடந்தாண்டு பெய்த மழையாலும், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் முழு கொள்ளளவான 6.5 அடியில் 5 அடி தண்ணீர் தேங்கியது. அதைத் தொடர்ந்து பெரிய கண்மாயின் கீழ் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் விவசாயம் பருவ மழையால் மகசூல் அடைந்தது.நெல் அறுவடை செய்யப்பட்ட பின் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் கோடை நெல் சாகுபடி, பருத்தி, எள், உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளும் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர் வறட்சியால் கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீர் நாளுக்கு நாள் விரைவாக குறைந்து வந்தது.தற்போது கண்மாய் நீர்மட்டம் குறைந்து தாழ்வான பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் உள்ள நிலை உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி கோடை சாகுபடி பயிர்களை காப்பாற்றுவது கேள்விக்குறியாகி உள்ளதால் ஏக்கருக்கு பல ஆயிரம் வரை செலவு செய்த கோடை நெல் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் பருவமழையை எதிர்பார்த்து கோடை விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி