பெரிய கண்மாய்க்கு வைகை நீர் திறக்க கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாய சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் முழு கொள்ளளவான 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயில் தற்போது 1.5 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.இந்த தண்ணீரை பயன்படுத்தி பெரிய கண்மாய் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் விவசாயத்தை காப்பாற்றி முழு மகசூல் பெறுவது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வருவதால் மட்டுமே முழுமையான பலன் பெரும் நிலை உள்ளது.இதையடுத்து வைகையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி பெரிய கண்மாய் பாசன சங்க பொதுச்செயலாளரும் தி.மு.க., ஒன்றிய செயலாளருமான மோகன் தலைமையில் விவசாய சங்கத் தலைவர் வன்மீகநாதன், செயலாளர் வைரவன், பொருளாளர் தவமணி, நிர்வாகிகள் சரவணன், வாசுதேவன் ஆகியோர் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.