துார்வாரப்படாத ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாய் விவசாயிகள் கவலை
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருப்பதால் சீமைக் கருவேலம் மரங்கள் வளர்ந்து வரத்து கால்வாய் மணல் மேடாகியுள்ளது. தண்ணீரை தேக்கி வைக்க முடியாமலும், தேவையான தண்ணீர் கிடைக்காமலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.முதுகுளத்துார் விவசாயிகளுக்காக காமராஜர் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாய் புல்வாய்குளத்தில் துவங்கி எஸ்.பி.கோட்டை, ஆப்பனுார், சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம் முதுகுளத்துார், கருமல், காத்தாகுளம், உத்தரகோசமங்கை, கடலாடி உள்ளிட்ட 71 கண்மாய் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் 41 கி.மீ.,க்கு கடந்த பல ஆண்டுகளாக முறையாக ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் வருவது கிடையாது. இதனால் ரெகுநாத காவிரி முழுவதும் சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் பாலைவனம் போல் மாறிவிட்டது. கண்மாய் மதகுகளும் சேதமடைந்து வருகிறது.முதுகுளத்துார், கடலாடியில் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நன்செய் நிலங்கள் வீணாகி வருகிறது. மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரும் கால்வாயில் தேங்கி நிற்காமல் வீணாகிறது. விவசாயி முருகன் கூறுகையில், ரெகுநாத காவிரி, கூத்தன் கால்வாயை துார்வார விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.