வெண்ணத்துார் கூட்டுறவு சங்க முறைகேட்டை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்
ராமநாதபுரம் : வெண்ணத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க முறைகேடுகளை கண்டித்தும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய காவிரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தேவிபட்டினம் வெண்ணத்துார் விவசாயிகள் இணைந்து ராமநாதபுரம் சாலைத்தெருவில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை பஜார் போலீசார் தடுத்துநிறுத்தினர். அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் துணைப்பதிவாளர் மணிகண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வெண்ணத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க முறைகேடுகள் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள் பட்டியலை மறைக்காமல் முழுமையாக வெளியிட வேண்டும். சங்கத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். சங்கத்திற்கு நிரந்தரமாக செயலாளர் நியமனம் செய்ய வேண்டும். தேவிபட்டினம் குரூப் பயிர் சேதம் ஏற்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் பயிர்காப்பீடு நிவாரணத் தொகை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் காவிரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, ஒன்றிய செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.