பலன்தராத, வெற்று அறிவிப்பு வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் விளாசல்
தென்னை விவசாயிகள் மீது பாராமுகம்
என்.மணிமாதவன், மாவட்ட செயலாளர், தென்னை விவசாயிகள்சங்கம், ராமநாதபுரம்: கடந்த ஆண்டை காட்டிலும் அதிகளவில் வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடாக 45 ஆயிரத்து 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகை பயிர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.நெல், கரும்பு, மக்காச்சோளம், பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் என அனைத்து வகை பயிர்களுக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உழவர் நல வேளாண் சங்கம் அமைக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைக்காக ரூ.841 கோடி ஒதுக்கீடு, நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.160 கோடி, இயற்கை வேளாண்மைக்கு ரூ.12 கோடி, டெல்டா மாவட்டங்களில் பாசன கால்வாய்களை துார் வார ரூ.14கோடி, கோவளத்தில் ரூ.360 கோடியில் புதிய நீர்தேக்கம், கோடை உழவுக்கு எக்டேருக்கு ரூ.2000 போன்ற அறிவிப்புகள் வரவேற்கதக்கது. தென்னை விவசாயிகள் மீது அரசு பாராமுகமாகவே உள்ளது. தென்னை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது, தமிழக அரசு சார்பில் தென்னை வாரியம் அமைக்கப்பட்டு மாநில தமிழரை தலைமையாக கொண்டு செயல்படுத்த வேண்டும் என்ற எந்த கோரிக்கையையும் நிறைவேற்றப்படவில்லை. காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிதி இல்லை
எம்.கவாஸ்கர், விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு, திருவெற்றியூர்: 160 கோடி ரூபாயில் நெல் சிறப்பு தொகுப்பு திட்டம், நெல் உற்பத்தித் திறனில் சாதனை அடையும் 100 விவசாயிகள் வெளிநாடு செல்லும் திட்டம், 1000 பட்டதாரிகள் மூலம் உழவர் நல மையங்கள், கூட்டுறவு பயிர்க்கடன், வேளாண்மையில் அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறியும் விவசாயிகளுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகை போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது. ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான கண்மாய்களை துார்வாரும் திட்டம், தெலுங்கானா மாநிலத்தில் அறிவிக்கபட்டுள்ள விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கான உதவித்தொகை வழங்கும்ரிது பந்து திட்டம் அறிவிப்பு இல்லை. நெல் ஆதார விலையை உயர்த்தி வழங்கும் திட்டம் அறிவிக்கவில்லை. பயிர் காப்பீடு திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை உள்ளது. அதற்கான அறிவிப்பு இல்லை. காவிரி, குண்டாறு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தும் அறிவிப்பு இல்லாததது ஏமாற்றமாக உள்ளது. விவசாயிகளுக்கு பயன் தருவதாக இல்லை
சி.முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, கமுதி: இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு என்பது சொல்லோடு மட்டும் இருக்கிறது. அதன் செயல்பாடு இல்லை. இதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திட்டங்கள் அதிகாரிகளுக்கு வேலை கொடுக்க தான் உள்ளது. விவசாயிகளுக்கு பயன் தருவது போல் இல்லை.பாரம்பரிய காய்கறிகள் விளைச்சலை ஊக்குவிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தனி பட்ஜெட் என்பது வெறும் அறிவிப்போடு மட்டும் தான் உள்ளது. கருத்து கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கூறுவதை கேட்டு அதை நிறைவேற்றுவது இல்லை. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கே நிதி ஒதுக்கப்படாமலும், நிறைவேற்றப்படாமலும் கிடப்பில் உள்ளது. இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகும் சூழ்நிலை தான் உள்ளது. இந்த ஆண்டு மக்களுக்கு பயன்படுகின்ற மாதிரி எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்புசெட்
எஸ்.கே.சி.தனபாலன், மாவட்டத்தலைவர், காவிரி குண்டாறு இணைப்பு கூட்டமைப்பு, ஆர்.எஸ்.மங்கலம்: கோடை உழவு செய்ய ஒரு எக்டேருக்கு ரூ.2000 மானியம், விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி நிதி ஒதுக்கீட்டால் விவசாயிகள் பயனடைவர். நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு வரவேற்க கூடியது. இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு, வேளாண் பட்டதாரிகள் மூலம் உழவர் நல சேவை மையங்கள் அமைத்தல் உள்ளிட்டவற்றை வரவேற்கலாம். ஆயிரம் விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்பு செட்டுகள் அமைப்பதற்கு நிதி உதவி விவசாயிகளுக்கு பயனளிக்கும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கருவேல மரங்களை அழித்து மிளகாய் சாகுபடியை ஊக்குவிப்பதற்கான திட்டம் வரவேற்கக் கூடியது. மேலும் தென் மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். -------------------உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
வீ.ஆதிகேசவன், தென்னை விவசாயி, ரெகுநாதபுரம்: -----------------------ரூ.108 கோடியே 6 லட்சத்தில் உணவு எண்ணெய் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் வரவேற்கத்தக்கது. தென்னை வாரியம் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்க வேண்டும்.மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருளுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள்அமைப்பது நல்ல விஷயம். அவற்றை முறையாக வழிமுறைப்படுத்தி உரிய விவசாயிகளுக்கு நேரடியாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் விளை பொருட்கள் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு விவசாயிகளை முன்னிறுத்தி கூடுதல் திட்டங்களை வகுக்க வேண்டும்.இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தவிர்க்க உரிய முறையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருள்களுக்கு நஷ்டம் இன்றி உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய விவசாயிகளுக்கு மட்டும் பயன் இல்லாமல் சிறு குறு நடுத்தர அனைத்து தரப்பு விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதாக வேளாண் பட்ஜெட் இருக்க வேண்டும். தென்மாவட்ட விவசாயிகளுக்கு துரோகம்
மு.மலைச்சாமி, பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர், பரமக்குடி: சீனி சக்கர சித்தப்பா சீட்டு எழுதி நக்கப்பா... முதல்வர் பாணியிலேயே சொல்வதென்றால் இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு சுவை இருக்காது. கடந்த ஆண்டு முதல்வர் பசும்பொன் வந்த போது காவிரி, வைகை, குண்டாறு, கிருதுமால் திட்டத்தை 100 சதம் நிறைவேற்றுவோம் என்றார்.கடந்த நவ.,10ல் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்விற்கு வந்தபோது, விவசாயிகள் கூட்டமைப்பு முதல்வரை சந்தித்து கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு 3000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுக்கோட்டையில் 7 மாவட்ட விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம்நடத்தி அரசின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.இத்தனை செய்தும் கண்டு கொள்ளாத தமிழக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிற அரசாக இருக்கிறது. மேலும் சட்ட சபையில் எம்.எல்.ஏ., க்கள், அமைச்சர்கள் பச்சை துண்டுகளை அணிந்து கொண்டு விவசாயிகளை ஏமாற்றி பச்சை துரோகம் செய்துஉள்ளனர். தென் மாவட்ட விவசாயிகள் புறக்கணிப்பு
அர்ச்சுணன், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர்: கடந்த 4 ஆண்டுகளை போல் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. மாநில நதி நீர் இணைப்பு, நீர் நிலைக் கட்டமைப்பை வலுப்படுத்தி, நீர்ப்பாசன திட்டங்களையும் விரிவுபடுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். ஆனால் இது இல்லை.விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதை உறுதி செய்யவில்லை. விவசாயத் துறைக்கு ஒதுக்கீடு ரூ. 45 ஆயிரத்து 661 கோடி மட்டுமே. விவசாயத்துறையில் அரசை விட, தனியார் நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. 2021 தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக 83 வாக்குறுதிகள் அளித்தனர். இந்த வாக்குறுதிகளை 5 பட்ஜெட்களிலும் நிறைவேற்றவில்லை.கேரளாவில் உள்ளது போன்று ஒவ்வொரு விளை பொருளுக்கும் கட்டுப்படியான விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் அதுவும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. நீர்நிலைகளில் உள்ள சீமைகருவேல் மரங்கள், ஆகாயத்தாமரை போன்றவை அகற்றப்படும் என்றனர். ஆனால் இந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர். மதுரையில் வேளாண்மை பல்கலை ஏற்படுத்தப்படும் என்றனர். அதற்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நெல் கொள்முதல் விலையாககுவிண்டாலுக்கு ரூ. 2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4000 என நிர்ணயித்த தொகையும் நடைமுறையில் இல்லை. காவிரி,வைகை, குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு 5 ஆண்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அடுத்ததாக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றனர். அதற்கும் இந்த 5 ஆண்டுகளில் தீர்வு காணப்படவில்லை. காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்ட விவசாயிகளை புறக்கணித்து விட்டனர். கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மானியங்களை பட்ஜெட்டில் அறிவித்து, விவசாயிகளுக்கு இந்த அரசு துரோகம் செய்துவிட்டது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்
பழ.வெங்கடேசன், விவசாயி, மருதிப்பட்டி: மாநிலத்தில் தென்னை விவசாயம் குறைந்து வரும் வேளையில் தென்னை விவசாயிகளை ஊக்குவிக்கவும், தென்னை உற்பத்தியை அதிகரிக்கவும் ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவாக உள்ளது. கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ. 4000 ஆக உயர்த்தப்படும் என்று தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் 3500 மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தருகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், பாரம்பரிய நெல் பயிர்களை சாகுபடி செய்து அவற்றை சந்தை படுத்தவும் அறிவிப்பு ஏதுமில்லை. காய்கறி பதப்படுத்தும் மையம், காய்கறி சார்ந்த தொழிற்சாலை அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஒரு பட்ஜெட். இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு இல்லை
ஆர்.கருப்பு, இயற்கை விவசாயி, மாத்துார்: விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளுக்கு நேரடியாக எந்த பயனும் இல்லை. தற்போது, படித்தவர்கள் உட்பட பலரும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை. இயற்கை விவசாயம் செய்பவர்கள் அரசின் எந்த சலுகையையும் எதிர்பார்ப்பதில்லை. தற்சார்பு முறையில் உரங்கள் உட்பட அனைத்தையும் தயார் செய்து கொள்கின்றனர். விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கு போதிய வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். விவசாய கட்டுமானத்திற்கே அதிக நிதி ஒதுக்குகின்றனர். இயற்கை விவசாயப் பொருட்களுக்கு தனி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரி விலை நிர்ணயம் செய்வது கூடாது. மிளகாய் செடிக்கு மானியம் வரவேற்கதக்கது
தங்கப்பாண்டியன், கல்வெளிபொட்டல், இளையான்குடி: கருவேல மரங்களை அகற்றி மிளகாய் செடி நடுவதற்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் என்பது வரவேற்கதக்கது. உழவு மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. இப்பகுதியில் மிளகாய் விளைச்சல் அதிகளவில் செய்யப்படும் நிலையில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது. தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் வேளாண் பல்கலை அமைப்பதற்கு எந்த முயற்சியும் இல்லை. தெளிவில்லாத அறிவிப்புகள்
இரா.திருநாவுக்கரசு, திருப்பாக்கோட்டை: பாசன கால்வாய் துார்வாரும் அறிவிப்பு மகிழ்ச்சி. ஆதி திராவிட மக்களுக்கு செம்மறி ஆடு வளர்க்க உதவியை அனைவருக்கும் வழங்க வேண்டும். 60 வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கும் அறிவிப்பை எதிர்பார்த்தோம். உர மானியத்திற்கு மத்திய அரசு தான் பங்களிக்கிறது. அதற்கு போட்டியாக மாநில அரசும் தனது பங்கை செலுத்தும் என எதிர்பார்த்தில் ஏமாற்றம் அளிக்கிறது. பயிர் இன்சூரன்ஸ் விவசாயிகளின் பங்களிப்பை குறைக்கவில்லை. கரும்புக்கு மானியம் அதிகரித்து உள்ளனர். ஆனால் அதிக விவசாயிகள் சாகுபடி செய்யும் நெற்பயிருக்கு மானியம் வழங்கவில்லை. ஒதுக்கும் நிதி சேர்வதில்லை
அ.கருப்பையா, இயற்கை விவசாயி, கிருஷ்ணன்பட்டி: கிராமப்புற விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மானியம் அதிகரிப்பு, கோடை உழவிற்கு மானியம் அளித்துள்ளதும் வரவேற்கத்தக்கது. இயற்கை விவசாயத்திற்கு இந்த ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி விவசாயிகளுக்கு சேர்வதில்லை. அதை அரசு உறுதி செய்ய வேண்டும். நுாறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் நெல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவது குறித்து அறிவிப்பில்லை. காவிரி -குண்டாறு இணைப்பிற்கு கடந்த பட்ஜெட்டில் நிதி பெயரளவிலாவது இருந்தது. தற்போது முற்றிலுமாக நிதி ஒதுக்கப்படவில்லை. சீமைக்கருவை ஒழிப்பிற்கு 2800 எக்டேர் நிலத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை,ராமநாதபுரத்தில் முழுமையாக ஒழிக்க வேண்டும். சீமைக்கருவை அழிந்தால் காட்டுபன்றி,மான்,காட்டு மாடு,மந்தி விவசாயத்திற்கு தொந்தரவும் குறையும். அழியும் தென்னை மரங்கள்
நா.இளங்கோவன், திருப்பாச்சேத்தி: சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்புவனம், மானாமதுரை வட்டாரத்தில் கண்மாய்களில் தான் அதிகளவு சீமை கருவேல மரங்கள் உள்ளது. வருவாய் கிடைப்பதால் அதனை அகற்ற அதிகாரிகளுக்கு மனமில்லை. இதில் மிளகாய் எங்கே பயிரிட. திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் தென்னை விவசாயம் பெருமளவு நடந்து வருகிறது. சாலை விரிவாக்கம், நகர்ப்புற விரிவாக்கம் உள்ளிட்டவற்றால் தென்னை மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. சில ஆண்டுகளாக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவே இல்லை. அதுகுறித்து பட்ஜெட்டில் இல்லை.