இளைஞர்கள் தற்கொலை அதிகரிப்பு; மன ரீதியான விழிப்புணர்வு தேவை
திருவாடானை; திருவாடானை, தொண்டி பகுதியில் மனரீதியான விழிப்புணர்வு இல்லாதால் இளைஞர்கள் உட்பட பலர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. திருவாடானை, தொண்டி பகுதியில் சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல பிரச்னைகளால் சமாளிக்க முடியாத நிலை வரும் போது தற்கொலை எண்ணம் வருகிறது. இதில் பெண்களை விட ஆண்கள் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். கணவன், மனைவி தகராறு, தொழில், உடல்நிலை பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இச் சம்பவங்கள் நடக்கிறது. இது தவிர சிறுவர், சிறுமிகளும் தற்கொலை செய்து கொள்கின்றனர். திருவாடானை, தொண்டி பகுதியில் இரு மாதங்களில் வாலிபர்கள் உட்பட ஐந்து பேர் தற்கொலை செய்துள்ளனர். குறிப்பாக திருவாடானையில் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய தபால் அதிகாரி, நேற்று முன்தினம் திருமணம் ஆகாத 24 வயது இன்ஜினியர் படித்த வாலிபர் தற்கொலை செய்த சம்பவத்தால் பெற்றோர் கவலை யடைந்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தற்கொலை எண்ணத்தில் உள்ளோரிடம் மன ரீதியாக ஆதரவு அளித்தால் தற்கொலை எண்ணம் மாறிவிடும். அதிகாரிகள் கிராமங்கள் தோறும் வாழ்க்கையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி ஆலோசனை வழங்கினால் தற்கொலை எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.