எட்டு மாதமாக திறக்கப்படாத நுாலகம் ஏப்.30ல் போராட்டம் அறிவிப்பு
பரமக்குடி : பரமக்குடியில் மாவட்ட அரசு கிளை நுாலகம் புதிய கட்டடம் கட்டப்பட்டு 8 மாதங்கள் ஆகும் நிலையில் திறக்கப்படாதது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்.,30ல் மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.பரமக்குடி கிளை நுாலகம் 1954 துவக்கப்பட்டு வாடகை கட்டடத்தில் இயங்கியது. இங்கு பல லட்சம் புத்தகங்கள் இருந்த நிலையில் வாடகை கட்டடம் சேதம் அடைந்ததால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டது. இங்கு புத்தகங்களை பராமரிக்க முடியாமல் இருந்தது.இந்நிலையில் 2022 ஏப்., மாதம் புதிய கட்டடம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கட்ட அனுமதி கிடைத்தது. 2023 பணிகள் துவங்கி 2024ல் முடிவடைந்துள்ளது. ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடம் 8 மாதங்களாக திறக்கப்படாதது குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.மேலும் பிப்.,21ல் செய்தி வெளியான நிலையில் 22ல் திறப்பு விழாவிற்காக வாழை மரங்கள் கட்டப்பட்டு ஆயத்தமாகியது. ஆனால் எந்த அறிவிப்பும் இன்றி திறப்பு விழா கைவிடப்பட்டது. இந்நிலையில் பரமக்குடி மக்கள் நுாலகம் சார்பில் ஏப்.,14ல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மக்கள் நுாலக தலைவர் சந்தியாகு தலைமையில், செயலாளர் வக்கீல் பசுமலை முன்னிலை வகித்தார். அப்போது அரசு சார்பில் நுாலகத்திற்கு 65 ஆயிரம் புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டப்பட்ட புதிய நுாலகம் திறக்கப்படாமல் உள்ளதால் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத சூழலில் ஏப்.,30ல் பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. நூலக பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.