பள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்து:2 மாணவர்கள் படுகாயம்
பரமக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடி மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் மீது கனரக லாரி மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். சத்திரக்குடி அருகே முத்துவயல் பகுதியில் மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்படுகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து 25 குழந்தைகள், 2 ஆசிரியைகள் என பள்ளி வேனில் ஏறி சத்திரக்குடி நோக்கி வந்தனர். அப்போது ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை சத்திரக்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகில், குழந்தைகளை இறக்கிவிட ரோட்டின் இடது புறம் பள்ளி வாகனம் நின்றது.தொடர்ந்து பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி கனரக வாகனம் சென்ற நிலையில் நின்று கொண்டிருந்த பள்ளி வாகனத்தின் மீது மோதியது. இதில் 11 மற்றும் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இருவர் தலையில் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சில குழந்தைகள் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.