உத்தரகோசமங்கையில் மண்டல பூஜை விழா
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ஏப்.,4ல் கும்பாபிஷேகம் நடந்தது. 25 நாட்களுக்குப் பிறகு அரைமண்டலமாக நடந்த இவ்விழா நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை நடந்தது.பின்னர் நேற்று காலை 6:00 முதல் 10:30 மணி வரை யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது.மங்கள விநாயகர், முருகன், மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மரகத நடராஜர், சகஸ்ர லிங்கம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.குடங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு மூலவர்களுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.பூஜைகளை கோயில் சிவாச்சாரியார்கள் செய்தனர். அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். உத்தரகோசமங்கை ஐயப்ப சேவா சங்கம் மற்றும் இனிசேரி சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் ஆசிரமம் சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.