பரமக்குடியில் பால் வியாபாரி கட்டையால் தாக்கி கொலை
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் மாடுகளை கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பால் வியாபாரியான முதியவர் சேதுபாண்டியை 70, கட்டையால் தாக்கி கொலை செய்த மற்றொரு பால் வியாபாரி ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குமாரகுறிச்சியைச் சேர்ந்தவர் சேதுபாண்டி. பரமக்குடி பாண்டியன் தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் ராமச்சந்திரன் என்ற பாண்டி 28. இவர்கள் பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் வைகை ஆற்றில் மாடுகளை கட்டி வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது குடும்பத்தினருக்கும் இடையே மாடுகளை கட்டுவதில் தகராறும் இருந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு சேதுபாண்டி, ராமச்சந்திரன் இடையே இப்பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற ராமச்சந்திரன் கையில் வைத்திருந்த கட்டையால் சேதுபாண்டி தலையில் தாக்கினார். இதில் அவர் சம்பவயிடத்திலேயே இறந்தார். ராமச்சந்திரனை எமனேஸ்வரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.