ராமநாதபுரம் நகர், கிராமங்களில் மினி பஸ் சேவை விரிவாக்கம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நகர், கிராமங்களில் புதிதாக அறிவிக்கப்பட்ட மினி பஸ்திட்டத்தில் இதுவரை 62 சதவீதம் இலக்கை எட்டியுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள குக்கிராமங்களுக்கு பஸ் சேவை வழங்கும் நோக்கில் போக்குவரத்து துறை சமீபத்தில் மினிபஸ் இயக்குவதற்கான புதிய விரிவான திட்டத்தை வெளியிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம், கமுதி, கீழக்கரை, பார்த்திபனுார், கடலாடி, வலங்காபுரி கடற்கரை, குருவாடி, முதுகுளத்துார், தொண்டி, சாயல்குடி, அபிராமம், ஆர்.எஸ்.மங்களம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பஸ் வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கு மினி பஸ் இயக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே மினி பஸ் இயக்க அனுமதி பெற்றுள்ள உரிமையாளர்கள் வழித்தடத்தை நீட்டித்து இயக்கவும், புதிதாக இயக்க விரும்புவோருக்கு அரசு அறிவுறுத்திய வழித்தடத்தில் இயக்கவும் அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுவரை 32 பேருக்கு மினி பஸ் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதில் 20 பஸ்கள், அதாவது 62.50 சதவீத பஸ்கள் இயங்கதொடங்கியுள்ளன. மீதமுள்ள 12 பஸ்கள் அரசின் தரச்சான்று பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. விரைவில் மினி பஸ் திட்டத்தில் 100 சதவீதம் இலக்கு எட்டப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.