பாசிபடிந்த ராமேஸ்வரம் கோயில் ராமர் தீர்த்த குளம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான ராமர் தீர்த்த குளம் பாசி படிந்து கிடப்பதால், பக்தர்கள் நீராடி செல்ல சிரமப்படுகின்றனர். குளத்தை சுத்தம் செய்ய கோயில்நிர்வாகம் முன்வர வேண்டும்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான ராமர் தீர்த்த குளம் கோயிலில் இருந்து 1 கி.மீ.,ல் உள்ளது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் முதலில் கோயிலுக்கு வெளியில் உள்ள தீர்த்தங்களை நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தங்களை நீராடுவது வழக்கம். அதன்படி தினமும் ஏராளமான பக்தர்கள் ராமர் தீர்த்த குளத்தில் நீராடி செல்லும் நிலையில், கடந்த சில மாதமாக தீர்த்தம் மாசடைந்து பாசி படிந்து கிடக்கிறது.இதனை சுத்தம் செய்ய ஹிந்து அமைப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் புனித நீராட வரும் பக்தர்கள் அருவெருப்புடன் நீராடி செல்கின்றனர். ஓராண்டில் ராமேஸ்வரம் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை, புனித நீராடல், தரிசன கட்டணம் என ரூ.25 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் புனித தீர்த்தங்களை சுத்தம் செய்ய கோயில் நிர்வாகம் முன்வராதது வேதனைக்குரியது என பக்தர்கள் தெரிவித்தனர்.