| ADDED : பிப் 03, 2024 05:01 AM
பரமக்குடி :பரமக்குடியில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டப்பாலம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்ட நிலையில் சிக்னல் இன்றி வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தை இணைக்கும் பிரதான நகராக பரமக்குடி உள்ளது. பரமக்குடி பஸ்ஸ்டாண்டில் இருந்து செல்லும் இளையான்குடி, மதுரை, ராமேஸ்வரம் ரோட்டை இணைக்கும் ஓட்டப்பாலம் பகுதியில் மிகுந்த நெரிசல் காணப்பட்டது. மேலும் பஸ் ஸ்டாப்புகள் குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டு வந்தது. இது குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வந்த நிலையில் பஸ் ஸ்டாப்புகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவுண்டானாவை சுற்றி மின்விளக்கு வசதியின்றி உள்ளது.இத்துடன் 5 முனை ரோட்டிற்கு அடுத்தபடியாக பிரதான வழித்தடமாக உள்ள இங்கு சிக்னல் பொருத்தப் படாமல் இருக்கிறது.இதனால் பகல், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் விபத்து அச்சத்துடன் பயணிக்குமாறு உள்ளது. இப்பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம், சப்-கலெக்டர் தங்குமிடம் உட்பட அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் பல உள்ளன.ஆகவே விபத்தை தவிர்க்கும் நோக்கில் சிக்னல்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.