தி.மு.க.,வில் கூட்டணி கட்சியினர் யாருமே மகிழ்ச்சியாக இல்லை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
பரமக்குடி: தி.மு.க.,வில் கூட்டணி கட்சியினர் யாருமே மகிழ்ச்சியாக இல்லை என்று பரமக்குடியில் நடந்த மாவட்ட அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: அ.தி.மு.க., கூட்டங்களில் எந்த சலசலப்பும் இல்லை. மிகைப்படுத்தப்பட்டது தான். ஊடகத்தினர் தான் பெரிதாக செய்தி வெளியிடுகின்றனர். நிர்வாகிகளிடையே ஆர்வம், கட்சிப் பணி செய்வதிலேயே போட்டி, பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கும் போது சிலர் பொறுமை இல்லாமல் பேசுகின்றனர். அ.தி.மு.க.,வில் எந்த பின்னடைவும் கிடையாது.ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என விஜய் கூறியது பற்றி கூட்டணி தேர்தல் நேரத்தில் தான் முடிவெடுக்கப்படும். அது பற்றிய பேச்சு வேண்டாம் என பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.தி.மு.க., கூட்டணி உடையும் என அ.தி.மு.க., எதிர்பார்க்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து கேட்ட போது, தி.மு.க., கூட்டணி உடையலாம். உடையக் கூடாது என உள்ளதா. அங்கு கூட்டணியல் உள்ளவர்கள் தினம் தினம் நாங்கள் இல்லாமல் ஆட்சியில் இருப்பீர்களா என சவால் விடுகின்றனர்.தி.மு.க., கூட்டணி கட்சியினர் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. சட்டசபை தேர்தலுக்குள் தி.மு.க., கூட்டணி பிசுபிசுத்து விடுமா என சில நாட்களில் தெரிந்து விடும். பா.ஜ., வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என ஒரு முறை இல்லை. நுாறு முறை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மட்டுமா அவதுாறாகப் பேசுகிறார். அங்குள்ள எல்லா தலைவர்களுமே எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள்.தி.மு.க., என்றாலே யாரையும் தரக்குறைவாக பேசுபவர்கள் தான். பரம்பரையே அப்படித்தான். அவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை. அவர்களை திருத்தவே முடியாது. மக்கள் தான் அவர்களை திருத்த வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, டாக்டர் மணிகண்டன் உடன் இருந்தனர்.