40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை கருத்தரங்கில் அதிகாரி தகவல்
ராமநாதபுரம் : உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என உலக தற்கொலை தடுப்பு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கில் ராமநாதபுரம் மாவட்ட மனநல அலுவலர் டாக்டர் சஞ்சய் பாண்டியன் வேதனை தெரிவித்தார். தற்கொலை எண்ணத்தை அடியோடு வரவிடாமல் தடுக்க வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டு தோறும் செப்.,10ல் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று இத்தினத்தை முன்னிட்டு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் உலக தற்கொலை தடுப்பு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரித் தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த், பரமக்குடி மாவட்ட மனநல பிரிவு சமூக பணியாளர் அவினாஷ் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியை திவ்யா வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட மனநல அலுவலர் டாக்டர் சஞ்சய் பாண்டியன் பேசியதாவது: ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு நாளைக்கு 3000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக ஐ.நா., சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக 15 முதல் 28 வயதுள்ளவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் அதிகளவில் தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களில் ஆண்டுதோறும் தமிழகம் 2, 3வது இடம் பெற்று வருகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லுாரிகளில் முகாம் நடத்துகிறோம். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை அவசியமாகும். மன அழுத்தத்தை போக்க உங்களது பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். அல்லது 14416 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வாழ்க்கை சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ள உளவியல் ஆலோசனை பெறலாம் என்றார். ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பேராசிரியர்கள் அலுவலர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் வினோத் குமார் நன்றி கூறினார்.