உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 50 கிராமங்களுக்கு ஒரு ஒயர்மேன் மின்தடை சீரமைப்பு பணி தொய்வு

50 கிராமங்களுக்கு ஒரு ஒயர்மேன் மின்தடை சீரமைப்பு பணி தொய்வு

திருவாடானை : திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரு ஒயர்மேன் மட்டும் பணியாற்றுவதால் மின்தடை ஏற்படும் போது சரி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. திருவாடானை மற்றும் நகரிகாத்தானில் துணை மின்நிலையம் உள்ளது. இந்த மின்நிலையத்தில் திருவாடானை, நகரிகாத்தான், கட்டவிளாகம், ஊரணிக்கோட்டை, சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒரு ஒயர்மேன் மட்டும் பணியாற்றுகிறார். உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஒயர்மேன் பணியை செய்கின்றனர். கண்மாய், குளங்கள், ஆறுகள் வழியாக செல்லும் மின் கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் டிரான்ஸ்பார்மரில் டிரிப் ஆகி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்களை வெட்ட மின்வாரியத்தில் ஆட்கள் கிடையாது. கிராமங்களில் வயர்மேன்கள் இல்லாததால் வீடுகளில் மின்தடை ஏற்படும் போது சரி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஒயர்மேன் பற்றாக்குறையால் பழுது நீக்கம், பராமரிப்பு மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பு முடங்கியுள்ளது. பருவ மழை காலத்தில் மின்சார பிரச்னைகள் உருவாகிறது. இரு துணை மின்நிலையங்களுக்கு ஒரு ஒயர்மேன் பணியாற்றுவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மழைக் காலத்தில் ஒரு பகுதியில் மின்தடையை சரி செய்து கொண்டிருக்கும் போது, மற்றொரு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் நீண்ட நேரம் மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின்சாரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக ஒயர்மேன்கள் நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி