குவாரி குத்தகை உரிமம் பெறுவதற்கு ஏப்.28 முதல் ஆன்லைன் விண்ணப்பம்
ராமநாதபுரம்: இணையதளத்தில் விண்ணப்பித்து குவாரி குத்தகை உரிமம் பெறும் புதிய நடை முறை ஏப்.,28 முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் கீழக்கரை, கடலாடி, கமுதி தாலுக்காக்களில் உடைகல், கிராவல், சாதாரண மண் குவாரி குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டு பணிகள் நடக்கிறது. குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்துச் செல்ல ஏதுவாக குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் இசைவாணை சீட்டுகள் 2024ல் செப்., முதல் நடைமுறையில் உள்ளது. மேலும் ஏப்.,15 முதல் வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைசீட்டுகள் (டிரான்ஸ்போர்ட் பாஸ்) இணையதளம் வழியாக வழங்கப்பட உள்ளது. அதாவது குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் www.mimas.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் ஏப்., 28 முதல் குவாரி குத்தகை உரிமங்கள் பெறுவதற்கான பழைய நடைமுறை கைவிடப்பட்டு ஆன்-லைன் நடைமுறை அமல்படுத்தப்படும். ஆகவே வாகன டிரைவர்கள், குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது உரிய நடை சீட்டும், கிரஷரிலிருந்து எம்.சாண்ட், ஜல்லி மற்றும் இதர உற்பத்தி சார்ந்த கனிமங்களை ஏற்றிச் செல்லும் போது உரிய போக்குவரத்து நடைசீட்டு பெற்று கொண்டு செல்லப்பட வேண்டும். வாகனத் தணிக்கையின் உரிய அனுமதியில்லாமல் குவாரிப் பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.