மேலும் செய்திகள்
பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
31-Dec-2025
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் நடந்தது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மார்கழி உற்ஸவம் நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து உற்ஸவம் நேற்று முன்தினம் மாலை மோகினி அவதாரத்துடன் நிறைவடைந்தது. இங்கு பெருமாள் வைகுண்டத்தில் வடக்கு திசை நோக்கி உள்ளது போல், பரமசுவாமி என்ற திருநாமத்துடன் மூலவராக வடக்கு திசை நோக்கி கோயில் கொண்டுள்ளார். இதனால் ஆண்டு முழுவதும் பரமபத வாசல் வழியாகவே பக்தர்கள் தரிசிக்கும் நிலையில், நேற்று முன்தினம் மாலை நடை அடைக்கப்பட்டது. நேற்று காலை சுந்தரராஜ பெருமாளுக்கு வஜ்ர கவசம் சாற்றி சர்வ அலங்காரத்துடன் அதிகாலை 5:20 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் முழங்க வழிபட்டனர். கோயிலில் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளிய பெருமாளுக்கு மாலைமாற்றல் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து கோயிலை சுற்றி வந்து ஏகாதசி மண்டபத்தில் அமர்ந்தார். பின்னர் 11:00 மணி தொடங்கி அனைத்து வகையான அபிஷேகங்கள் நடந்தது. * எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சர்வ அலங்காரத்துடன் பெருமாள் எழுந்தருளினார். கோயிலை சுற்றி வந்த பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில் சயன திருக்கோலத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். * பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வந்தார். அதிகாலை 4:00 மணி முதலே பக்தர்கள் திரளாக வந்திருந்து அனைத்து கோயில் களிலும் தரிசித்தனர்.
31-Dec-2025