சேதமடைந்த கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம்
கீழக்கரை: கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சி அலுவலகம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது.1982ல் கட்டப்பட்ட இக்கட்டடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. இந்நிலையில் கட்டடத்தின் கூரை பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. தில்லையேந்தல், மாவிலாத்தோப்பு, மருதன்தோப்பு, கும்பிடுமதுரை, ஆழ்வார்கூட்டம், பனையங்கால், சின்னப்பாளையரேந்தல், பெரிய பாளையரேந்தல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் வரி, சொத்து வரி செலுத்த ஊராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர்.கடந்த வாரம் கட்டடத்தின் கூரை பூச்சு சிமென்ட் பெயர்ந்து விழுந்தது. இதனால் அச்சத்துடன் ஊழியர்கள் பணி செய்கின்றனர். ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் இடம் உள்ளது. சேதமடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். இது குறித்து திருப்புல்லாணி யூனியன் அலுவலக அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளேன் என்றார்.