பரமக்குடி - ராமநாதபுரம் ரோடு சேதம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள் ; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை
பரமக்குடி: ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நுழையும் இடத்தில் ரோடு சீரமைக்கப்படாத நிலையில் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கவேண்டியுள்ளது.மதுரையில் இருந்து பரமக்குடி அரியனேந்தல் எல்லை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை உள்ள இருவழிச் சாலை பராமரிக்கப்படாமல் இருக்கிறது. கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம், உணவகங்கள் பெயரளவில் உள்ளன.மேலும் அரியனேந்தல் எல்லையில் இருந்து பரமக்குடி நுழையும் மேம்பாலம் கீழ்ப்பகுதி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஒவ்வொரு முறை மழையின் போதும் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் ரோடு உடைந்துள்ளது.இதனால் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவ்வப்போது கவிழ்ந்து விபத்துக்கள் நடக்கிறது. தற்போது ரோட்டில் கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.கொண்டை ஊசி வளைவு கொண்ட இப்பகுதியில் மின்விளக்கு வசதியின்றி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளது. திருப்பாசேத்தி அருகே நான்கு வழிச்சாலை உட்பட, சத்திரக்குடி இருவழிச் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.எனவே விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலை துறை நிர்வாகம் உடனடியாக ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.