பரமக்குடி: டூவீலர் விபத்தில் புதுமணப் பெண் பலி
பரமக்குடி: பரமக்குடி அருகே கணவருடன் இரவு 12:00 மணிக்கு டூவீலரில் சென்ற புதுமணப்பெண் விபத்தில் பலியானார். பரமக்குடி அருகே பி.புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் 31. இவரது மனைவி சங்கீதா 27. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களாகும் நிலையில் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் பிட்னஸ் சென்டர் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மதுரையில் உள்ள கிரிக்கெட் கிளப்பிற்கு சென்று கிரிக்கெட் விளையாடி விட்டு டூவீலரில் பரமக்குடி திரும்பினர். அப்போது இரவு 12:00 மணிக்கு மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கமுதக்குடி மேம்பாலம் பகுதியில் துாக்க கலக்கத்தில் டூவீலர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளானது. ஆனால் 3:00 மணி நேரத்திற்கு பிறகு அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்த நிலையில் பரமக்குடி தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டனர். இதில் சங்கீதா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். மதன் ஹெல்மெட் அணிந்திருந்த நிலையில் உடலில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இரவு பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படும் நிலையில் தொடர்ந்து பரமக்குடி அருகே விபத்துக்கள் அதிகரித்துள்ளது.