பள்ளிகளில் இரவு காவலர் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் விலை உயர்ந்த உபகரணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக மாறிவருகிறது. திருவாடானை தாலுகாவில் 77 அரசு தொடக்கபள்ளிகளில் முதல் கட்டமாக 40 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் ஆறு உயர்நிலை, 5 மேல்நிலைப்பள்ளிகளில் ைஹடெக் ஆய்வகங்கள் உள்ளன. இதில் கம்யூட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கல்வி கிடைக்கும். உயர் தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக்கும் பணிகள் நடந்தாலும் அனைத்தும் பாதுகாப்பில்லாமல் உள்ளது. ஒவ்வொரு பள்ளிகளும் ரூ.50 லட்சத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில், உள்ளாட்சி துறைகளின் வாயிலாக, இரவுக்காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.