பெயரளவில் ஆம்புலன்ஸ் 108 சேவை பரமக்குடியில் நோயாளிகள் அவதி
பரமக்குடி: பரமக்குடியில் ஆம்புலன்ஸ் 108 சேவை பெயரளவில் உள்ளது. நீண்ட துாரம் உள்ள கிராமங்களுக்கு வர மறுப்பதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.ஆம்புலன்ஸ் 108 நகர்புறங்கள் மட்டுமல்லாது, கிராமப்புறங்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. 24 மணி நேரமும் இலவசமாக நோயாளிகளை தகுந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில் பரமக்குடியில் குறைந்த அளவிலான ஆம்புலன்ஸ் 108 வாகனங்களே உள்ளன. அவசர தேவைக்கு அழைக்கும் போது குறிப்பிட்ட கி.மீ., இடைவெளியில் தான் வர முடியும் என டிரைவர்கள் கூறி வர மறுக்கின்றனர். மேலும் உயிருக்கு போராடுபவர்களை ஏற்றிச் செல்லவும் தயக்கம் காட்டுகின்றனர். ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சைக்கு செல்ல பயன்படுத்தும் வாகனம். ஆனால் தற்போது செயல்படும் சில டிரைவர்கள் மற்றும் செவிலியர்கள் மேலிட தகவல் கிடைத்தால் மட்டுமே செல்ல முடியும் என்பதாக நோயாளிகளின் உறவினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் இச்சேவையின் பயன் கிடைக்காமல் பல நோயாளிகள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் 108 சேவையை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.