ஆதார் மையத்தில் நீண்டநேரம்காத்திருந்து மக்கள் அவதி! குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அவசியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் அட்டை பதிவு, புகைப்படம் எடுக்க நீண்டநேரம் காத்திருந்து மக்கள் சிரமப்படுவதால் குடும்பத்துடன் வரும் மக்கள் வசதிக்காக குடிநீர்போதுமான இருக்கை வசதிகள் செய்துதர அதிகாரிகள் முன்வர வேண்டும்.தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலக வளாகத்தில் நிரந்தர ஆதார் சேர்க்கை இ-சேவை மையம் செயல்படுகிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் வருகின்றனர். முதலில் வரும் நபர்களுக்கு டோக்கன் வழங்கி புகைப்படம் எடுக்கின்றனர். அதன் பின் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதம் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மையத்தில் பெயரளவில் ஒருசில இருக்கைகள் உள்ளன.மற்றப்படி கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தாலுகா அலுவலகத்தில் உள்ள மையத்தில் குறுகிய கட்டடமாக உள்ளதால் வெளியில் வெயில்,மழையில் தரையில் அமர்ந்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்டத்தில் பிரதான ஆதார் பதிவு மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைவாக கைரேகை பதிவு, புகைப்படம் எடுக்க வேண்டும்.குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குடிநீர், இருக்கை வசதிகள் செய்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.