பரமக்குடியில் பாய்ந்து வரும் நாய்களால் பதற்றத்தில் மக்கள்
கட்டுப்படுத்த தேவை நடவடிக்கைபரமக்குடி: பரமக்குடியில் ஒவ்வொரு தெருக்களிலும் நாய்கள் பாய்ந்து வருவதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர். கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒவ்வொரு தெருவிலும் 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. வீடுகளில் வளர்ப்பு நாய்களும் ஏராளமாக இருக்கிறது. பொதுவாக செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம். இந்நிலையில் தெரு நாய்கள் கவனிப்பாரின்றி உணவுக்காக அலையும் நிலை அதிகரித்துள்ளது. முன்பு தெருக்களில் குப்பை வீசப்பட்டதால் அவற்றிலிருந்து உணவுகளை நாய்கள் உண்டு வந்தன. தற்போது துாய்மை இந்தியா திட்டத்தில் ஒவ்வொருவரும் குப்பையை வீட்டிலேயே சேமித்து காலையில் வண்டிகளில் கொடுத்து வருகின்றனர். இதனால் நாய்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுவதுடன், சாக்கடை கழிவு நீரில் இறங்கி அவற்றை உண்ணும் நிலை உள்ளது. பல நாய்கள் நோய் தொற்றுடன் வெறி பிடித்து அலைவது அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, அவற்றை பாதுகாப்பான இடங்களில் அடைத்து உணவு வைப்பது என நீதிமன்றங்கள் பல்வேறு வழிமுறைகளை கொடுத்துள்ளது. ஆனால் பரமக்குடியில் வழக்கம் போல் நாய்கள் சுற்றி வரும் நிலையில் மக்கள் மீது பாய்ந்து கடிக்கும் நிலையில் பதற்றத்தில் உள்ளனர். எனவே நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பரமக்குடி உட்பட மாவட்டத்தில் உள்ள நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.