கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் திணறும் மக்கள்
பரமக்குடி : கட்டுமான பொருட் களின் விலை நாளுக்கு நாள் ஏறும் சூழலில் தரமான எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொறியாளர்கள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமானத்திற்கு முக்கிய தேவையாக மணல் உள்ளது. தற்போது ஆற்று மணல் அள்ளுவது தடை செய்யப்பட்ட சூழலில் எம்.சாண்ட் மற்றும் பி.சாண்டை பயன்படுத்தும் சூழல் உள்ளது. பி.சாண்ட் என்பது பிளாஸ்டரிங் வேலைக்காக பயன்படுத்துவது. இது எம்.சாண்ட் போல் இல்லாமல் மிகவும் மெல்லியதாக இருக்கும். எம்.சாண்ட் என்பது உற்பத்தி செய்யப்படும் மணல். இது பி.சாண்டை விட சற்று தடிமனாக இருக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் சாதாரண வீடு கட்ட சதுர அடிக்கு 2000 ரூபாய் வீதம் பெற்று வந்தனர். தற்போது 2500 முதல் 3000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பரமக்குடி போன்ற பகுதிகளில் 6 யூனிட் கொண்ட எம்.சாண்ட் மணல் 32 ஆயிரம் ரூபாய்க்கும், பி.சாண்ட் மணல் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் இது போன்றவை துாசியுடன் கலப்படம் செய்திருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்துடன் துாசி மணல் 6 யூனிட்டுக்கு 27 ஆயிரம் ரூபாய் விலை உள்ளது. மேலும் முக்கால் ஜல்லி என்பது 26 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. இவை துாரத்தை பொருத்தும் விலையில் மாறுபடுகிறது. தொடர்ந்து குவாரிகளில் இருந்து பொருட்கள் தரமானதா என யாராலும் பார்க்க முடிவதில்லை. இதனால் ஒரு சில கட்டுமானங்களில் பூச்சுகளில் குறைபாடுகள் உண்டாகிறது. ஆகவே சுத்தமான துாசி கலப்படம் இல்லாத எம்.சாண்ட் மற்றும் பி.சாணட் உள்ளிட்ட மணல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கட்டடப் பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.