சேதுக்கரை கழிமுகத்துவாரத்தில் பிடிக்கப்படும் இறால் மீன்கள் அசைவ பிரியர்கள் விருப்பம்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலும் கொட்டகுடி ஆறும் சந்திக்கும் கழிமுகத்துவாரத்தில் கைகளால் தடவி இறால் மீன்களைப் பிடிப்பதில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான கூலி வேலைசெய்யும் பெண்கள் மற்றும் ஆண்கள் சேதுக்கரை கழிமுகத்துவாரத்தில் ஆழம் குறைவான பகுதியில் இறங்கி கைகளால் தடவி தடவி இறால் மீன்களை பிடித்து சேகரித்து அவற்றை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.இறால் மீன் பிடிப்பில்ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:அதிக சுவை கொண்ட இறால் மீன்களை கைகளால் தடவி பிடித்து வருகிறோம். களிமண் நிறைந்த பகுதிகளில் மண்ணுக்குள் அடியில் புதைந்திருக்கும் கூனி எனப்படும் இறால் மீன் குஞ்சுகளை முதுகு பகுதியில் கட்டப்பட்டுள்ள பனை ஓலை பெட்டியில் சேகரித்து குறிப்பிட்ட கிலோ சேர்ந்தவுடன் வீடு திரும்புகிறோம்.காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை பிடிக்கப்படும் மீன்களை இரவு சமையலுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். இவை அதிக சுவை கொண்டது. அசைவ பிரியர்களின் விருப்பமான உணவாகும். இவை கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை ரகத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.