உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திட்டம் தயார்: ரூ.79 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டடம்: பழைய அலுவலக கட்டடத்தையும் புதுப்பிக்க முடிவு 

திட்டம் தயார்: ரூ.79 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டடம்: பழைய அலுவலக கட்டடத்தையும் புதுப்பிக்க முடிவு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி நகர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக 5 மாடிகளுடன் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.79 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த பழைய அலுவலக கட்டடமும் புதுப்பிக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் உள்ள பழைய, புதிய கலெக்டர் அலுவலக கீழ்தளம், மேல் தளத்தில் கலெக்டர் அலுவலகம், டி.ஆர்.ஓ., கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம், மூன்று மாவட்டங்களுக்குரிய ஆவண ஆய்வுக்குழு அலுவலகம் மற்றும் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ-சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கி உள்ளன. இது போக பழைய கருவூலம் கட்டடத்திலும் கூட்டுறவு, கனிம வளம், தமிழ் வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை என பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. தினமும் ஏராளமான வெளியூர் பணியாளர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். போதிய இட வசதி, போதிய கழிப்பறை, குடிநீர் வசதி இல்லாமல் அலுவலர்கள், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பழைய கருவூலம், கலெக்டர் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மழைக்காலத்தில் கூரை இடிந்து விழுவது, நீர்கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளது. குறிப்பிடும் படியாக பெரிய அளவில் கூட்டம் நடத்தும் வகையில் கூட்ட அரங்கமும் இல்லை. இதையடுத்து தற்போது கலெக்டர் அலுவலகம் உள்ள வளாகத்தின் முன்புறப் பகுதியில் அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைநது செயல்படும் வகையில் ரூ.79 கோடியில் தரைத்தளம், 5 மாடிகளுடன் புதிதாக கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை(கட்டுமானம்) பொறியாளர்கள் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் பழமை வாய்ந்த பழைய கலெக்டர் அலுவலகத்தை ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இப்பணிகள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் புதிய கலெக்டர் அலுவலகம் பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என பொதுபணித்துறை(கட்டுமானம்) அதிகாரிகள் கூறினர்.---------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை