மழையால் நெய்வயல்-அதங்குடி ரோடு சேதமடைந்ததால் அவதி
திருவாடானை: மழையால் நெய்வயல்-அதங்குடி ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.திருவாடானை தாலுகாவில் பெய்த மழையால் கிராம ரோடுகள் சேதமடைந்துள்ளது. நெய்வயல் ஊராட்சி அல்லிக்கோட்டை பாண்டி கோயில் புல்லாவயல், நெய்வயல், அதங்குடி வரை செல்லும் ரோடு 5 கி.மீ., உள்ளது.திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோடு மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாகி உள்ளது. இதே போல் 2 கி.மீ.,க்கு அல்லிக்கோட்டை- நாச்சியேந்தல் ரோடும் சேதமடைந்துள்ளது. திருவாடானையில் இருந்து தேவகோட்டைக்கு டவுன்பஸ் இந்த ரோடு வழியாக ஒரு நாளைக்கு 14 முறை செல்கிறது. மழைக் காலத்தில் பஸ் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்து விடுவதால் டவுன் பஸ் நிறுத்தப்படுகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.நெய்வயல் கிராம மக்கள் கூறுகையில், போதிய பராமரிப்பு இல்லாததால் இரு ரோடுகளையும் தமிழக நெடுஞ்சாலைத்துறை பட்டியலில் இணைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.