ராமநாதபுரத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.11,850 கோடி கடன் வழங்க இலக்கு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடப்பு நிதியாண்டில் (2024- 25) 11, 850.68 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்ட முன்னோடி வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கி, மாவட்ட அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடப்பு நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கடன் திட்ட அறிக்கையை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.கடன் திட்ட அறிக்கையில் வேளாண் துறைக்கு ரூ.10,583 கோடி, சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.894.97 கோடி, வீட்டுக்கடன் ரூ.65.18 கோடி, கல்விக்கடன் ரூ.24.96 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு 1.48 கோடி ரூபாய், இதர கடன்களுக்கு ரூ.101.19 கோடி. மேலும் முன்னுரிமை அல்லாத கடன் ரூ.179.9 கோடி ரூபாய் என 11,850.68 கோடி ரூபாய்க்கு கடன் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ற நிதியாண்டில் (2023--24) 11,022.83 கோடி ரூபாய் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 11,999.69 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், இந்திய ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் ஸ்ரீதர், ஐ.ஓ.பி., ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ராஜரெத்தினம் பங்கேற்றனர்.