உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சீமைக்கருவேல மரங்கள் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் அதிகரிப்பு 

சீமைக்கருவேல மரங்கள் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் அதிகரிப்பு 

ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் துவங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம் கொண்டது. கண்மாயில் 618 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். இதன் மூலம் 3500 ஏக்கர் வரை நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது. தொருவளூர், பாப்பாகுடி, குமரியேந்தல், கவரங்குளம், களத்தாவூர், சூரன்கோட்டை, இடையர்வலசை, கே.கே.நகர், முதுனாள், நொச்சிவயல், கூரியூர், அச்சுந்தன்வயல், புத்தேந்தல், சாக்காங்குடி, வன்னி வயல், சித்துார், லாந்தை, ராமநாதபுரம் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர்.மேலும் கண்மாய் நீர் ராமநாதபுரம் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகும். களத்தாவூர், நொச்சிவயல், கூரியூர், புத்தேந்தல் செக்டேம்களில் கண்மாய் நீர் தேக்கப்படும். ராமநாதபுரம் நகரில் உள்ள முகவை ஊருணி, லெட்சுமிபுரம் ஊருணி, நீலகண்டி ஊருணி, பேராகண்மாய் ஊருணி, நொச்சியூருணி, கிடாவெட்டி ஊருணி, குண்டூருணி, செட்டியூருணி, அல்லிக்கண்மாய் ஊருணி உள்ளிட்டவைகளுக்கு பெரிய கண்மாய் நீர்தான் ஆதாரம்.ஆனால், பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கண்மாய் துார்ந்து போய் மண் மேடாகி விட்டது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதி குறைந்து விட்டது. கண்மாய் துார் வாரப்படாமலும், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் மழை நீர் வீணாகி வருகிறது.குறிப்பாக ராமநாதபுரம்- - மதுரை ரோடு லாந்தை அருகே தென்கலுங்கு நீர்பிடிப்பு பகுதி, கரையில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதன் காரணமாக மழை பெய்தாலும் முழுமையாக நீரை சேமிக்க முடியவில்லை.எனவே தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, கண்மாயை துார்வார வேண்டும். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி