நாளை மறுநாள் மீன்பிடிப்பதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் ஆயத்தம்
ராமேஸ்வரம்:மீன்பிடி தடை காலம் முடிந்து நாளை மறுநாள்(ஜூன் 16) மீன்பிடிக்க ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகுகளில் எரிபொருள் நிரப்பி ஆயத்தமாகி உள்ளனர். மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்., 15 முதல் 61 நாட்கள் வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்த நிலையில் நேற்று இரவுடன் தடை முடிகிறது. ஆனால் அரசு விதிமுறைப்படி இன்று (ஜூன் 15) மீன்பிடிக்கச் செல்ல ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களுக்கு அனுமதி இல்லை. ஜூன் 16ல் மீன்பிடிக்க மீன்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகுகளில் எரிபொருள் நிரப்பியும், புதிய மீன்பிடி வலைகள், தளவாட பொருட்களை ஏற்றி வைத்து பிடிக்கச் செல்ல தயாராகி உள்ளனர். 60 நாட்களாக ராமேஸ்வரம் கடலோர பகுதி மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நிலையில் நேற்று அதிக மீனவர்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இருந்தது. சூறாவளியால் தடை :அரசு விதிமுறைப்படி இன்று (ஜூன் 15) மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க பாம்பன் மீனவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுவதாக வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இன்று பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறை தடை விதித்தது.