உள்ளூர் பக்தர்களுக்கு தடை விதிப்பால் ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு தோல்வி
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் சிறப்பு வழியில் தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு தடை விதித்தனர். இதற்கு தீர்வு காண கோயில் அதிகாரி, உள்ளூர் பக்தர்கள்குழு ஆய்வு செய்தும் தோல்வியில் முடிந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள்பொது தரிசன வரிசையுடன், ரூ.100, 200 கட்டணவரிசையில் தரிசிக்க கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த இரு மாதமாக உள்ளூர் பக்தர்களும் கட்டண வரிசையில் செல்ல கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் பக்தர்கள், பாரம்பரியமாக செல்லும் சிறப்பு வழியில் சென்று தரிசிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், இதனை வலியுறுத்தி ஜூன் 17ல் கோயிலுக்குள் நுழையும் போராட்டம் நடக்கும் என தெரிவித்தனர்.இதற்கு தீர்வு காண உள்ளூர் பக்தர்கள் சிறப்பு வழியில் தரிசிக்க மாற்று வழியை ஆய்வு செய்ய கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோயில் இணை ஆணையர்செல்லத்துரை, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி, நகராட்சி தலைவர் நாசர்கான், ராமேஸ்வரம் மக்கள் நல பேரவை குழுவினர் பிச்சை, செந்தில், பிரபாகரன் கோயிலுக்குள் சென்று உள்ளூர் பக்தர்கள்தரிசிக்கும் வழித்தடம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் ஆய்வு தோல்வியில் முடிந்தது. ஆகையால் ஜூன் 17ல் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என மக்கள் நல பேரவை குழுவினர் தெரிவித்தனர்.