உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இருளில் மூழ்கும் ராமேஸ்வரம் கோயில் கோபுரங்கள்: பக்தர்கள் வேதனை

இருளில் மூழ்கும் ராமேஸ்வரம் கோயில் கோபுரங்கள்: பக்தர்கள் வேதனை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கோபுரங்கள் மின்னொளியின்றி இருளில் மூழ்குவதால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர். ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகை தந்து தரிசிக்கின்றனர். உலக பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை, சுவாமி தரிசன கட்டணம், புனித நீராட கட்டணம் என ஓராண்டுக்கு ரூ. 30 கோடி ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு வருவாயாக கிடைக்கிறது. ஆனால் கோயில் நான்கு கோபுர நிலைகளில் மஞ்சள் நிற மின்விளக்குகளை தவிர, கோபுரங்களை பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் மின்விளக்கு இல்லாததால் கோபுரங்கள் இரவில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் இரவில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், கோயில் கோபுரமும் அதன் அடையாளத்தையும் காண முடியாமல் திணறுகின்றனர். ஓராண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் ஈட்டும் இக்கோயில் கோபுரங்களை மின்னொளியில் ஜொலிக்கச் செய்து பக்தர்களுக்கு காட்சிப்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து கோயில் ஊழியர் கூறுகையில், கோயில் கோபுரங்கள் இருளில் ஜொலிக்கும் வகையில் விரைவில் எமினேஷன் லைட் பொருத்தப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை