கீழக்கரை மருத்துவமனையில் புற்றுநோய் ஆலோசனை மையம் அமைக்க கோரிக்கை
கீழக்கரை: கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் புற்றுநோய் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். புற்று நோய் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவு செய்கின்றனர்.நோயால் பாதிக்கப்படுவோர் அதிக தொகை செலவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருவாரியாக நடுத்தர குடும்பத்தினராக உள்ளனர். இவர்களுடைய வருமானத்திற்கு அதிகமாக இந்த நோயால் செலவு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெருவாரியாக உள்ள புற்று நோயாளிகளின் நலன் கருதி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நவீன வசதி உள்ளடக்கிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு கொண்டு வர வேண்டும்.கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் புற்று நோய் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.