புதிதாக அமைத்த புறவழிச்சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
முதுகுளத்துார்: -முதுகுளத்துாரில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே சரவணப் பொய்கை ஊருணி துார்வாரப்பட்டு நடைபயிற்சி பாதையாக மாற்றப்பட்டது. முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் பேவர் பிளாக் ரோடு சேதமடைந்து நடப்பதற்கு லாயக்கற்ற பாதையாக மாறி உள்ளது. இதனால் நடைபயிற்சி செல்லும் மக்கள் ஆபத்தான முறையிலே காலை, மாலை நேரத்தில் ரோட்டோரத்தில் செல்கின்றனர். முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருந்து நீதிமன்றம் வரை புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இங்கும் மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்விளக்கு வசதி இல்லாததால் இருளில் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் ரோட்டோரத்தில் கூட்டமாக அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால் நடைபயிற்சி ஈடுபடும் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையோரம் மின்விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.