ஆதங்கொத்தங்குடி கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உள்ள ஆதங்கொத்தங்குடி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி சனி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆதங்கொத்தங்குடியில் உள்ள பழமையான ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தென் திருப்பதி என்றழைக்கப்படுகிறது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளில் அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. முதுகுளத்துார், சாயல்குடி, ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி ஆகிய இடங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முதுகுளத்துார் பஸ் பணிமனையில் இருந்து ஆதங்கொத்தங்குடி, பூசேரி வழியாக ஒருசில நேரங்களில் மட்டும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுகுறித்து கீரனுார் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சண்முகவள்ளி கூறியதாவது: ஆதங்கொத்தங்குடி கிராமத்திற்கு போதிய பஸ் வசதியின்றி பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். கூடுதல் பணம் செலவு செய்து சரக்கு வாகனம், ஆட்டோவில் வந்து செல்கின்றனர். எனவே விசேஷ நாட்களில் முதுகுளத்துாரில் இருந்து ஆதங்கொத்தங்குடிக்கு சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.